Wednesday, January 10, 2018

போகி




"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே'"
என்பது‍ நன்னூல் சூத்திரம். பழந் தமிழர்களின் வாழ்வு இயற்கையின் ஊடே இயைந்து‍ நடந்த வாழ்வாகும். தன் வாழ்வின் நெறிகளை தன் மொழியினுள் அமைத்து‍ வாழ்க்கை முறை, வாழும் நெறி, மொழி அனைத்தும் ஒன்றுற கலந்து‍ இயற்கையுடன் வாழ்ந்தான் அன்றைய தமிழன்.
            தமிழர்களின் வாழ்வில் தைப் பொங்கல் அவனது‍ வாழ்க்கை நெறி எவ்வாறு‍ இயற்கையுடன் ஒன்றி இணைந்துள்து‍ என்பதனைப் பறை சாற்றும் ஒரு‍ மாபெரும் திரு‍விழாவாகும்.
            பொங்கி வழிதல் என்பது‍ சிறப்பு. பாலினை பொங்க வைப்பது, பொங்கலினை பொங்க வைப்பது‍ சிறப்புகளை குறிக்கும். சிறப்பான திருவிழாக்களில் இவ்வாறு‍ பொங்கி வழிய வைப்பது‍ மங்கலகரமான செயல். பொங்கி வழிதல் திருவிழாவின் சிறப்பினை மற்றும் தமிழனின் செல்வச் சிறப்பு, மனச் சிறப்பு, வீரச் சிறப்பு, காதற் சிறப்பு போன்ற சிறப்புகளை உணரவைப்பவை ஆகும். சிறப்புகள் முழுமையாகி வழிந்து‍ ஓடுகின்றன என்ற கருத்தினை உணர்த்துபவை இத்ததகைய பொங்க வைப்பவன.
            புதியன புகுதலுக்கு‍ நாம் கொண்டுகிறோம் பொங்கல். பழையன கழிதலுக்கு‍ நாம் கொண்டாடுகிறோம் போகி.
            பழையனவைகளை கழித்தால் தான் நாம் நம்மைப் பொங்கல் திருவிழாவிற்கு‍ தயார்படுத்திக் கொள்ள முடியும். புதியன புகுத்தலுக்கு‍ நாம் தயார் நிலையில் இருப்போம். புதியன புகுதலும் இயல்பாகவே நம்முடன் வேர் ஊள்றும்.
            பழயன எவை? இவை தெரிந்தால் தானே நாமும் போகித் திருவிழாவினை சிறப்புடனும் உணர்வபுர்வமாகவும் கொண்டாட முடியும். பொங்கல் திருவிழாவின் முன் ஏற்பாடுகளைச் சரி வரச் செய்திட முடியும்.
            பண்டைய தமிழர் சமுதாயத்தில் உழவுத் தொழிலே முதன்மை தொழிலாக இருந்து வந்தது‍. எனவே அன்று‍ பழயன கழிதல் என்பது‍ வித்து‍ இல்லாத, வீரியம் இழந்த, வளர்ச்சிக்கு‍ வித்திடாத, பயன்பாட்டுக்கு‍ உதவாத விதைகளைக் கழித்தலே ஆகும். இது‍ போக வளர்ச்சி பாதைக்கு‍ வழி வகுக்க மாசுகளை அழித்து‍ம் போகி என்ற திருவிழாவினை மாபெரும் சிறப்புடன் கொண்டாடி வந்தான். இவ்வாறான அழித்தல் பொங்கல் திருவிழாவினை கொண்டாடுவதற்கான முன் செயலாகும். முன் செயல்கள் ஒழுங்குடன் நடந்தால் தான் பின் செயல்கள் சிறப்புடன் நடக்கும். முன் ஏறு‍ செல்லும் பாதையில் தான் பின் ஏறு‍ செல்லும். எனவே தமிழன் சீரிய கவனத்துடன் வளமைக்கு‍ ஊறு‍ விளைவிக்கும் மற்றும் பயன்படாதவைகளை அழிக்கவே ஒரு‍ விழா கண்டான் அது‍ தான் போகி. போகி சிறப்புடன் அமைந்தால் தான் நாம் சிறப்புடன் பொங்கல் திருவிழாவினை கொண்டாட முடியும்.
            தற்போதைய காலத்தில் பல்வேறு‍ தொழில்களுடன் நாம் இருந்து‍ வருகிறோம். இவற்றில் எவ்வாறு‍ நாம் போகி திருவிழாவினைச் சிறப்புடன் நடைபெறச் செய்து‍ பொங்கல் திருவிழாவினைக் கொண்டாடுவது‍?
            அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்பது‍ நமக்கு‍க் கிடைத்த சிறப்பான ஞான வாக்கு‍‍ ஆகும். எவ்வித தொழில்கள் செய்து‍ வந்தாலும் நாம் அனைவரும் மானிடர்கள் தான். எனவே நமது‍ மனிதப் பண்புகளை இழக்கச் செய்யும் வளர்விக்க பயன்படாத செயல்கள், அத்தகைய செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள், கட்சிகள், தனி நபர்களை இனம் கண்டு, அவைகளை அழித்து‍ போகியை சிறப்புடன் கொண்டாடுவோம்.
            மனிதன் என்ற மாண்பினைக் குலைக்கும் மற்றும் மனிதனின் சிந்தனை என்னும் சக்தியினை இழக்க வைக்கும் கள், தொலைக்காட்சி தொடர்கள், சமுதாய வலைதளங்கள் இவற்றுள் சில. அவற்றில் இந்தச் சமுதாய வலைதளங்களின் பங்கு‍ மனிதனைக் கெடுப்பதில் பெரும் பங்கு‍ வகிக்கிறது. இலவசம் என்ற பொய்யான போர்வையின் கள்ளைவிட மனதின் மனதினைப் பாதித்து‍ செயல்படாமல் இருக்கச் செய்து‍ நம்மையே விற்று‍ அந்நிறுவங்கள் இலாபம் சம்பாதித்து‍ மனிதனைப் புதைகுழிக்குள் தள்ளி விடுகின்றன.
            இந்தச் சமுதாய வலைதளங்கள் நம்மை நமக்கு‍ தெரியாமல் விற்று‍ பணம் சம்பாதிக்கின்றன. இந்தக் கட்சிகள் இலவசங்கள் தருகிறோம் என்ற பெயரில் நமது‍ பணத்தினை நமக்கு‍த் தந்து‍ பல்வேறு‍ வழிகளில் தங்களது‍ பைகளை நிரப்பி நம்மை ஏப்பம் விடுகின்றனர்.
            இந்த போகித் திருவிழாவினை நாம் சிறப்பாக கொண்டாடிட இந்த இலவசங்கள் என்ற மாயை அழிக்க வேண்டியது ஒரு‍ பகுதியாகும். மற்றோரு‍ பகுதியாக நமது‍ வளர்ச்சியைக் கெடுக்கும் வேலை நேரத்தைக் கெடுக்கும், தவறான கதைகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்கள், சமூக வலைதளங்களில் இருந்தும் விடுபடுவதும் தான்.
            மனித மாண்புகளை அழிப்பவைகளை அழித்து‍ நாம் போகியை சிறப்புடன் கொண்டாடுவோம். இந்த வித்து‍ நாம் பொங்கல் திருவிழாவினை சிறப்புடன் கொண்டாடத் துணை புரியும்.  மகிழ்ச்சியான மனிதனாகப் பொங்கல் திருவிழாவினை கொண்டாட இந்தப் போகி கொண்டாட்டம் அமையட்டும்.
            தீயவற்றை அழித்து‍ பொங்கி வழியும் வளர்ச்சியைக் காண மகிழ்ச்சிகரமான பொங்கல் திருவிழாவினை எதிர் நோக்கி போகியைக் கொண்டாடு‍வோம்.