Sunday, January 11, 2026

சிறை - திரைப்பட விமர்சனம்

படத்தின் முதல் பாதி கதாநாயகனின் செயல்பாடுகளுக்கான காரணங்களை மட்டுமே சொல்வது படம் சற்று தொய்வாகத் தெரிந்தாலும், படம் முழுமை பெறும்போது அந்த முதல் பாதியின் தேவை நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

மத ரீதியான அழுத்தம் ஒரு தனிமனிதனை எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது என்பதையும், மதத்தை வைத்து ஒருவரைப் பொதுமைப்படுத்துவது எவ்வளவு பொருளற்றது என்பதையும் இப்படம் ஆணித்தரமாகப் பதிவு செய்கிறது.

சிறைவாசிகளும் மனிதர்களே என்பதை இப்படம் நமக்கு நினைவுபடுத்துகிறது. போலித்தனமற்ற, மனிதநேயம் கொண்ட மனிதர்களும் சிறைக்குள் இருக்கிறார்கள் என்ற மற்றொரு பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது படம்.

அதே சமயம், மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு இயந்திரம், எவ்வளவு உணர்ச்சியற்ற முறையில் செயல்படுகிறது என்பதைத் திரைக்கதை தோலுரித்துக் காட்டுகிறது. இத்தகைய இயந்திரத்தனமான அமைப்பில் சிக்காமல், மனிதர்களுக்காகச் செயல்படும்போது ஏற்படும் சிக்கல்களையும் படம் இயல்பாகச் சொல்லிச் செல்கிறது.

கதிரவனாக வரும் விக்ரம் பிரபு, படத்தின் மொத்த கனத்தையும் தன் தோள்களில் சுமந்து முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார்.

அப்துல்லாவாக வரும் அக்‌ஷய் குமார்  மற்றும் கலையரசியாக வரும்  அனிஷ்மா இவர்களின் இயல்பான நடிப்பு பாராட்டுக்குரியது. குறிப்பாக, கதிரவனிடம் தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி ஒரு சிறந்த 'அழகியல்' தருணம்.

அப்துல்லாவின் தாயாக வரும் ரம்யா சுரேஷ், கலையரசியின் அக்காவாகவும் நடித்தவர்கள் பாசத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போலி அலங்காரமின்றி யதார்த்தமாகப் நடித்துளளனர். படத்தில் வரும் இடங்களும் எவ்வித செயற்கை அலங்காரமும் இன்றி படமாக்கப்பட்டுள்ளன.

ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை இரைச்சலாகத் தெரிந்தாலும், பாடல்கள் இனிமையாக அமைந்துள்ளன.

படத்தின் முடிவு சினிமாத்தனமாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளது.

அதிகாரம் என்பது மக்களுக்கானது; அது மக்களுக்குப் பயன்படாதபோது அதனால் என்ன பயன்? அரசாங்கம் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதில் பொதுமக்களாகிய நமக்கும் பொறுப்பு உள்ளது என்பதை இப்படம் உரக்கச் சொல்கிறது. மக்களுக்கானதாக இல்லாத அரசினால் அல்லது அதிகாரத்தினால் விளையும் வலிகளை 'சிறை' நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது. அந்த வலிகளை சுமப்பது சாதாரண பொது மக்களே.

No comments:

Post a Comment