Tuesday, June 1, 2021

யானிஸ் வருஃபாகிஸ் எழுதிய பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு தமிழில் எஸ். வி. ராஜதுரை

 Tamil Translation of Talking to My Daughter About the Economy : A Brief History of Capitalism by Yanis Varoufakis


வெளியீடு‍
க்ரியா
புது‍ எண் 2, பழைய எண்‌ 25,

17வது‍ கிழக்குத் தெரு,
திருவான்மியூர்,

சென்னை 600 041.
பக்கங்கள் 203
விலை ரூ. 275

ஒரு‍ புத்தகத்திற்கு‍ முன்னுரை மற்றும் முடிவுரை எவ்வளவு முக்கியமானது‍ என்பதனை இந்தப் புத்தகத்திலிருந்து‍ தெரிந்து‍ கொள்ளலாம். புத்தகம் எதற்காக எழுதப்பட்டது‍, ஏன் எழுதப்பட்டது‍, எழுதியவரின் பின்புலம் மற்றும் ஏன் பொருளாதாரம் பற்றி நாம் அதாவது‍ தன் மகள் ஏன் தெரிந்து‍ கொள்ள வேண்டும் என்பதனை தெளிவாக விளக்குகிறார்.

முடிவுரையில் ஆசிரியர் சொல்லி இருப்பது‍ போல அவர் அவர் கொண்ட கொள்கைகளுக்காக வாதிடாமல் தன் மகளின் (மேலும் நம்முடைய) சிந்தனைக்கே விடுகிறார்.

கதைகள் மற்றும் பிரபலமான திரைப்படங்கள் வழியாக எளிதான விளக்கங்கள் வழியாகவே விளக்குகிறார். அதனால் புரிதல் என்பது‍ எளிதாகவே அமைந்து‍ விடும்.

முதலில் 'உபரி' பற்றித் தெளிவாக எளிதாய் பிரிந்து‍ கொள்ளக் கூடிய வகையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த 'உபரி' எவ்வாறு‍ ஏற்றத்தாழ்வுகளுக்குக்‍ காரணமாய் இருக்கிறது‍ என்பதனை 'அபாரிஜின்கள்' (ஆஸ்திரேலியக் பூர்வகுடிகள்) வரலாறு‍ மூலம் விளக்குகிறார். 'அபாரிஜின்கள்' வரலாற்றினை படிக்கும் போது‍ ஏன் சில கேள்விகள் எழவில்லை எனக் கேட்டு‍ச் சிந்திக்க வைக்கிறார்.

சந்தையும் பொருளாதாரமும் ஒன்று‍ தான் என்று‍ பலரும் செய்யும் தவற்றிலிருந்து‍ நம்மை விலக்கி சந்தை வேறு‍ பொருளாதாரம் வேறு‍ என்று‍ நம்மை உணரவைக்கிறார்.

கடன், பணம், அரசு, அதிகார வர்க்கம், ராணுவம், மதகுருமார்கள் இவை எப்படிச் செயல்படுகிறன என்றும் 'உபரி'க்கும் இவர்களுக்குமான தொடர்பு பற்றி எளிமையாய் புரிய வைக்கிறார்.

அடுத்து, பொருளுக்கும் சரக்குக்கும் ஆன வேறுபாடு‍ உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் விளக்குகிறார். எல்லாவற்றையும் எவ்வாறு‍ சரக்குகளாக மாற்றுகின்றனர் என்பதனைச் சொல்கிறார். சந்தைகளைக் கொண்டிருந்த சமுதாயங்கள், சந்தைச் சமுதாயங்களாக ஏன்? எவ்வாறு? மாறின என்பதனைப் புரியவைக்கிறார்.

உலக வாணிபம் பற்றி ஒரு‍ பொதுவான சித்திரித்தைத் தருகிறார். வரலாற்றின் இருண்ட பரிசோதனைக்கூடங்களாக தொழிற்கூடங்கள் இருக்கின்றன என்பதை படம் பிடித்து‍ நமக்குக் காட்டுகிறார்.

பணம் தான் எல்லாமே என்ற நிலை இப்போது‍ இருப்பது. முன்னர் எப்படி‍ இருந்தது. இப்போது‍ எவ்வாறு‍ மாறியுள்ளது‍ என்ற கசப்பினை கற்றுத் தருகிறார்.

மேலும், ஆசையைத் தூண்டுவதின் மூலம் கவர்ந்திழுப்பதை ஃபவுஸ்டஸ் தனது‍ ஆன்மாவை மெஃபிஸ்டோஃபெலெஸ்க்கு‍ விற்ற கதையினை சொல்லி கடன் வட்டியை விளக்குகிறார். சந்தைச் சமுதாயங்களின் பொருளாதாரம் நின்று‍ விடுவதற்கு‍ நாம் நம் செல்வத்தை சேமிக்க தொடங்கினாலே போதும் என்று‍ சொல்கிறார்.

அடுத்ததாக தொழில்முனைவோர்கள் என்பவர்கள் வருங்காலத்தினுள் பயணம் செய்யக்கூடியவர்களாவும் வங்கியாளர்கள் அவர்களின் முகவர்களாக எப்படி‍ செயல்படுகிறார்கள் என்றும் இதனால் எவ்வாறு‍ பொருளாதார வீழ்ச்சி அடைகிறது‍ என்பது‍ பற்றி விளக்குகிறார். வங்கியாளர்க்கும் அரசுக்கும் இடையிலினான உறவு எவ்வாறு‍ நச்சுத் தன்மை கொண்டதாக உள்ளது‍ என்று‍ கூறுகிறார். வங்கிகள் தவிர்க்க முடியாத ஒட்டுண்ணிகளாக உயிர் வாழ்கின்றன என்று‍ நமக்குப் புரிதலை ஏற்படுத்துகிறார்.

தொடர்ந்து, வேலையின்மையை மறுப்பவர்கள் பற்றிச் சொல்லும்போது‍ பாதிப்புக்கு‍ யார் ஆளாகிறார்களோ அவர்கள் மீதே பழியைச் சுமத்து‍வதை அடக்கி வைப்பதற்கான தந்திரம் என்பதை வெளிப்படுத்துகிறார். இத்தகையைப் பழியை பெண்கள், ஆஸ்திரிலேய பழங்குடிகள் அனுபவதித்தைக் காட்டுகிறார்.

மான் வேட்டைக்குக்‍ குழுவாகச் செல்பவர்கள் உறுதியுடன் மான் வேட்டையில் ஈடுபடுவார்கள். அவர்கள் தனித்தனியாக முயல்கள் வேட்டையாடுவதை விரும்புவதில்லை. இதில் 'நம்பிக்கை' எவ்வாறு‍ 'வலிமை' சேர்க்கிறது‍ என்பதனை கூறுகிறார்.

உழைப்பு ஏன் வீடுகள், கார்கள் போன்ற பொரு‍ள் போன்றதல்ல, உழைப்பும் பணமும் ஒன்றக்கொன்று‍ மிகவும் வித்தியாசமான சரக்குகள் என்பதைத் தெளிவுபடுத்துகிறார். உழைப்புச் சந்தை, பணச் சந்தை ஆகியவற்றின் சிக்கலை ஈடிப்ஸ் ரெக்ஸ் கதையுடன் பொருத்திச் சொல்கிறார்.

அதன் பின், மேரி ஷெல்லியின் டாக்டர் விக்டர் ஃப்ராங்கென்ஸ்டைன் கதை வழியாக தொழில்நுட்பம் சமுதாயத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை விளக்குகிறார். இயந்திரங்கள் எவ்வாறு‍ வேலையினை எளிதாக்காமல் மேலும் கடினமாக்கு‍கிறது‍ என்பதனை 'டெர்மினேட்டர்', 'தி மேட்ரிக்ஸ்' திரைப்படங்கள் துணை கொண்டு‍ விளங்கச் சொல்வதால் எளிதாக நாம் உணர்ந்து‍ கொள்ள முடியும். இந்த திரைப்படங்கள் இளம் தலைமுறையினர் அனைவருக்கும் தெரிந்த படம் என்பதால் ஒப்பிடும் போது‍ எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

மனிதர்களையே எவ்வாறு‍ இயந்திரமாக மாற்றப்படுகிறார்கள், அதற்கு‍ ஏற்படும் எதிர்ப்பு, அந்த எதிர்ப்பு ஒரு‍ போதும் வீணானதல்ல என்பதனை 'ஸ்டார் ட்ரெக்' கதையைப் பொருத்திச் சொல்கிறார்.

நாம் இயந்திர அடிமைகளாக இருக்கிறோமா அல்லது‍ இயந்திர எஜமானர்களாக இருக்கிறோமா? 'ரெப்ளிகன்ட்'க்கும் இயந்திரத்துக்கு‍மான வித்தியாசம், மனித தலையீடு‍ இன்றி இயங்கும் இயந்திரங்கள் பரிவர்த்தனை மதிப்பை உருவாக்க முடியாது‍ என்பதை 'மேட்ரிக்ஸ்' திரைப்படத்தின் காட்சிகளைக் கொண்டு‍ நம்மை கண்டு‍கொள்ளச் செய்கிறார். பரிவர்த்தனை மதிப்பின் ரகசியம் மானிடர்கள் தான் எனப் புரியவைக்கிறார்.

பிற்பாடு, விலை வேறுபாடு, பணத்தின் பரிவர்த்தனை மதிப்பு, பண வீக்கமும் பண வாட்டமும், வட்டி‍ விகிதங்கள், பணத்தின் விலை போர்க் கைதிகள் முகாமில் நடந்தவற்றை வைத்து‍ விளக்குகிறார். மேலும் போர்க் கைதிகள் முகாமின் பொருளாதாரத்திற்கும் பணமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரங்களுக்கு‍ உள்ள வேறுபாடுகளைக் கூறுகிறார். பிட்காயின்கள்  அரசியல் தன்மையற்றதாக்குவதற்கான ஒரு‍ முயற்சி என வர்ணிக்கிறார். அரசியல் தன்மையற்ற பணம் என்பதிலிருந்து‍ விடுபட பணத்தை ஜனநாயகப்படுத்துவது‍ தான் என்றும் அதே சமயம் அது‍ கடினமானது‍ ஆனால் முடியாதது‍ என்று‍ கூறுகிறார்.

கடைசியாக, 'தி மேட்ரிக்ஸ்' திரைப்படத்தில் ஒரு‍ காட்சியில் இயந்திரம் மனிதர்களை வைரஸ் உடன் ஒப்பிடுவது‍ உண்மையோ என்று‍ நினைக்கத் தோன்றுவதை ஞாபகப்படுத்துகிறார்.

அனுபவ மதிப்பை விட பரிவர்த்தனை மதிப்பை மேலனதாகக் கருதும் சமுதாயம் இயற்கையை அழிக்கிறது‍ என்பதை விளக்கத்துடன் விளக்குறார். சந்தைத் தீர்வுகள் முரண்நகை தான் என்பதனை விளக்குகிறார். தனியார் நலன்களும் புவிக்கோளத்தின் நலன்களும் ஒன்றிணைவது‍ மூலம் தான் நன்மைகளை உருவாக்க முடியும் என்பதை எளிதான எடுத்துக்காட்டுடன் விளங்கச் செய்கிறார்.

பொருளாதாதரத்தில் அரசியல் எவ்வாறு‍ பின்னிப் பிணைந்துள்ளது‍ என்பதைத் தெளிவாக உரைக்கிறார். உண்மையான ஜனநாயகம் மட்டுமே நடைமுறை சாத்தியமான ஒரே தீர்வாக இருக்க முடியும் என்று‍ முடிக்கிறார்.

முடிவுரையில் அவர் சொல்கிறார், பொருளாதாரம் என்பது‍ நாம் சிரத்தையெடுத்துப் படிக்க முடியாத வகையில் மிகவும் கடினமானதாகவும் சலிப்பூட்டக்கூடியதாகவும் உள்ள விஷயம், எனவே அதை வல்லுநர்களிடம் விட்டுவிட வேண்டும். உண்மையென்னவென்றால், உண்மையான வல்லுநர்கள் என்று‍ யாரும் இங்கு‍ இல்லை. மேலும், பொருளியலாளர்களிடமே பொருளாதாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற அளவுக்கு‍ முக்கியமானதும் அல்ல.

எனவே, பொருளாதாரத்தை நாம் அனைவரும் கையில் எடுத்துக் கொள்வோம்.

டி.எஸ். இலியட்டின் 'Little Gidding' நெடுங்கவிதையின் ஐந்தாம் பகுதியுள்ள வரிகளுடன் முடிக்கிறார். அந்த கவிதை வரிகள்

தேடுதலிருந்து‍ நாம் ஓய மாட்டோம்
தேடுதலின் இறுதி என்பது‍
எங்கிருந்து‍ தொடங்கினோமே
அங்கு‍ வந்துசேர்ந்து‍
அதை முதல் முறையாக
அறிவதுபோல அறிவதுதான்.

எனவே கூகுளில் தேடாதீர்கள். தேடுதலை தொடருங்கள்.

தமிழில் வழங்கிய ஏஸ்.வி. ராஜதுரை அவர்களின் முயற்சி மூல ஆசிரியரின் முயற்சிக்குச்‍ சிறிதும் குறைவு அல்ல. அருமையான சிறப்பான மொழிபெயர்ப்பு.

இந்த புத்தகத்தை வாசியுங்கள். சிந்தியுங்கள். பொருளாதாரத்தைத் தெளிவாகத் தெரிந்து‍ கொள்ளுங்கள்.