திங்கள், 30 மார்ச், 2026

தமிழக அரசியல் மாற்றமா அல்லது ஒரு மாயையா? தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளிக்கும் வாக்கு ஏன் மக்களாட்சிக்கு எதிரானது?

நமக்குத் தேவையானது மக்களாட்சி; மன்னராட்சி அல்ல!

தமிழக அரசியல் களம் இன்று ஒரு பெரும் திருப்புமுனையில் நிற்கிறது. புதிய முகங்கள், புதிய கட்சிகள்—இவை எல்லாம் மாற்றத்திற்கான அறிகுறி என்று சொல்லப்படுகின்றன. ஆனால், நாம் ஒரு கேள்வியை முன்னிறுத்த வேண்டும்: இது மாற்றமா, அல்லது வெறும் மாயையா?

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய அலை போலக் கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ரசிகனாக ரசிப்பதற்கும், குடிமகனாக வாக்களிப்பதற்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கறது. அந்த வித்தியாசத்தை நாம் அனைவரும் உணர வேண்டும்.

1. சினிமா கைதட்டல் – நிஜ வாழ்க்கைத் தீர்வா?

வெள்ளித்திரையில் கதாநாயகன் ஒரே வசனத்தில் உலகத்தையே மாற்றிவிடுவார். அந்த வினாடி வெளிப்படும் கைதட்டல்கள் ஆரவாரமானவை; ஆனால், நிஜ அரசியல் என்பது ஒரு காட்சியல்ல, அது பல கோடி மக்களின் வாழ்வாதாரம்.

பள்ளிகள், மருத்துவமனைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு—இவை வெறும் வசனங்களால் தீர்க்கப்பட வேண்டியவை அல்ல; தீர்க்கக்கூடியவையும் அல்ல. திட்டமிடல், நிர்வாகம் மற்றும் பொறுப்புணர்வால் மட்டுமே இவை சாத்தியம். கைதட்டல்களுக்கும், நிஜ நிர்வாகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதே ஒரு வாக்காளனின் முதல் கடமை.

2. 'தலைவர்' என்பவன் கடவுளா?

ஒரு தலைவரை நாம் மதிக்கலாம்; ஆனால் அவரை 'கேள்விக்கு அப்பாற்பட்டவர்' என்று கருதுவது மக்களாட்சிக்கு சவக்குழி.

மன்னராட்சியில் மன்னரின் சொல் வேதவாக்கு; ஆனால் மக்களாட்சியில் மக்களின் கேள்வியே இறுதித் தீர்ப்பு.

எங்கு ஒரு தலைவர் தனது செயலை நியாயப்படுத்தக் கடமைப்பட்டவர் இல்லையோ, அங்கு மக்களாட்சி மரணிக்கிறது. தலைவர் என்பவர் தவறே செய்யாத கடவுள் அல்ல; தவறு செய்தால் தட்டிக்கேட்கப்படும் ஒரு பிரதிநிதி மட்டுமே.

3. ரசிகர் கூட்டமா? விழிப்புணர்வுள்ள குடிமக்களா?

இன்று விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளத் துப்பில்லாத அரசியல் சூழலில், ரசிகர் மன்றங்களின் அடிப்டையில் ஒரு கட்சி உருவாவது ஆபத்தானது. ரசிகன் "என் தலைவர் தவறே செய்யமாட்டான்" என்று கண்மூடித்தனமாக நம்புவான்; ஆனால், குடிமகன் "என் தலைவர் தவறு செய்தால் தட்டிக்கேட்பேன்" என்று உறுதி கொள்வான். தமிழகத்திற்குத் தேவை ரசிகர் பட்டாளம் அல்ல; தகுதியை ஆராயும் அறிவுப்பூர்வமான வாக்காளர்கள்.

4. ஆள்பவர்களா? அல்லது பிரதிநிதிகளா?

மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்:

மன்னராட்சி: அதிகாரம் மேலிருந்து கீழே பாயும்; மக்கள் அடிபணிந்து கிடக்க வேண்டும்.

மக்களாட்சி: அதிகாரம் மக்களிலிருந்து மேலே செல்லும்; ஆள்பவர்கள் மக்களுக்கான வேலையாட்கள் (Representatives).

நாம் தேர்ந்தெடுப்பது நம்மை ஆளும் மன்னர்களை அல்ல; நம்முடைய குரலைப் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டிய பிரதிநிதிகளை. நாம் ஆளப்படும் பொருட்கள் அல்ல; ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் எஜமானர்கள்!

புத்தகத்தின் அட்டைக்கு மயங்காதீர்கள்!

அழகான புத்தகத்தின் அட்டையைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். அதன் உள்ளே இருக்கும் கதையின் தரம் தான் முக்கியம்.

சினிமா புகழ் என்பது கவர்ச்சிகரமான அட்டை; ஆனால் கொள்கை என்பது உள்ளே இருக்கும் வீரியமான கதை.

சினிமாப் புகழால் வரும் போதையைத் தள்ளி வைத்துவிட்டு, சிந்திக்கும் திறனைத் தீட்டுங்கள்.

சிந்திப்போம்!

கேள்விகள் கேட்போம்!

செயல்படுவோம்!

கேள்விகளே மக்களாட்சியின் சுவாசக் காற்று!

நாம் தேடுவது மன்னராட்சி அல்ல — மக்கள் நலன் காக்கும் உண்மையான மக்களாட்சி!

மக்களாட்சி மலர ஓட்டு போடுவோம்.

வெல்லட்டும் மக்களாட்சி

ஞாயிறு, 29 மார்ச், 2026

ஒரு விளம்பரம் - ஒருவழிப் பாதை: அத்துமீறலும் திமிரும்...

சமீபத்தில் சக்ரா கோல்டு டீ விளம்பரம் என்  கவனத்தை ஈர்த்தது. அழகான யதார்த்தமான விளம்பரம். ஒருவழிப் பாதையில் 'ராங் ரூட்டில்' (Wrong Side) திமிருடன் கார் ஓட்டி வரும் ஒரு நபர், சரியாக வரும் பெண்ணை வழிவிடுமாறு மிரட்டுவார்.
ஆனால், அந்தப் பெண் பணியாமல் உறுதியாக நின்று, தவறு செய்தவரையே பின்னோக்கிச் செல்ல வைப்பார்.

​இந்தக் காட்சி வெறும் விளம்பரமல்ல — நம் அன்றாடச் சாலைப் போரின் கசப்பான உண்மை. விளம்பரம் காட்டும் உண்மை; விளம்பரம் சொல்லும் அவலம்​ நம் வாழ்க்கையில், இதுபோன்ற சூழல்களை நாம் நாள்தோறும் சந்திக்கிறோம். ஆனால், அங்கே நடப்பதோ தலைகீழ். தவறு செய்பவர்களே "உரிமையோடு" கோபப்படுகிறார்கள்; சரியாகச் செல்வோர் சங்கடத்துடன் ஒதுங்கிச் செல்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களோ, "ஏதோ அட்ஜஸ்ட் செய்து போங்களேன்" என்று தர்ம உபதேசம் செய்கிறார்கள்.
இந்த 'அட்ஜஸ்ட்மென்ட்' கலாச்சாரம் தான், தவறு செய்பவர்களின் துணிச்சலைத் தூண்டுகிறது.

​ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது என்பது வெறும் விதிமீறலா? இல்லை... குற்றவியல் நடவடிக்கை! ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது என்பது வெறும் 'போக்குவரத்து விதிமிறல்' அல்ல; அது சக மனிதனின் உயிருக்குக் குறிவைக்கும் ஒரு குற்றவியல் நடவடிக்கை.

​பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ், இத்தகைய செயல்கள் இப்போது கடுமையான பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன: BNS பிரிவு 281 (முன்னைய IPC 279): பொதுப்பாதையில் அஜாக்கிரதையாக அல்லது அலட்சியமாக, மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. சட்ட நடவடிக்கைகள்: இப்போது இது வெறும் அபராதத்துடன் முடிந்துவிடுவதில்லை. காவல்துறை அவர்கள் மீது FIR பதிவு செய்யலாம். இது ‘அபாயகரமான ஓட்டுதல்’ (Rash Driving) எனக் கருதப்படும். ​தண்டனை விவரம்: இக்குற்றத்திற்காக 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அல்லது 1,000 முதல் 5,000 வரை அபராதம், அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

​'பழக்கதோஷம்' எனும் உயிர்க்கொல்லி சட்டம் கடுமையாக இருந்தாலும், "கொஞ்சம் தூரம் தானே", "எப்போதும் இப்படித்தான் போவேன்" எனப் 'பழக்கதோஷம்' பேசும் கூட்டம் பெருகிவிட்டது. இவர்கள் சரியாகச் செல்வோரையே மிரட்டுவதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் ஒருவித 'சாலை ரவுடித்தனம்'. இத்தகையவர்கள் செய்யும் இந்தச் சிறிய 'ஷார்ட்கட்' ஆசை, ஒட்டுமொத்தப் போக்குவரத்து ஒழுங்கையும் சீர்குலைத்து, பலரின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது. இது மற்ற வாகன ஓட்டிகளுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், எரிச்சலையும் தருகிறது.

​மாற்றம் எங்கே தொடங்கும்? அந்த  விளம்பரத்தில் அந்தப் பெண் காட்டிய துணிச்சல், நம்முடைய வாழ்க்கையிலும் நம் ஒவ்வொருவருக்கும் தேவை. மாற்றம் என்பது தனிமனித ஒழுக்கத்தில் தொடங்க வேண்டும்: சாலை விதிகளைப் பின்பற்றுவது ஒரு சட்டக் கடமை மட்டுமல்ல, அது ஒரு மனிதநேயப் பண்பு. அது ஒரு சமூகச் கடமை. தவறு செய்பவர்களுக்கு வழிவிடுவதைத் தவிர்த்து, அவர்களைச் சட்டத்திற்குப் பணிய வைக்கும் விழிப்புணர்வு பொதுமக்களிடம் வளர வேண்டும்.

​​ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தால் விபத்து ஏற்படாது. ஆனால் பொதுப்பாதையில் அஜாக்கிரதையாக அல்லது அலட்சியமாக, மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது - ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது, செல் போன் பேசிக் கொண்ட வாகனம் ஓட்டுவது, அதி வேகமாக  வாகனம் ஓட்டுவது, அதீத ஒலி ஏற்படுத்துவது போன்றவை விபத்து ஏற்பட வைக்கும்.

சாலை என்பது தனி மனிதனின் வசதிக்காக உருவாக்கப்பட்டதல்ல; அது அனைவரின் பயணத்திற்கானது. ஒருவழிப் பாதையில் தவறான திசையில் செல்லும் ஒவ்வொருவரும், ஒரு விதியை மட்டுமல்ல — மறற் உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

​இனிமேல் சாலைகளில் “அட்ஜஸ்ட்” செய்ய வேண்டியது விதிமீறல்களுக்காக அல்ல  விதியை மீறத் துடிக்கும் நம் மனநிலைக்காகத்தான்!

சக்ரா கோல்டு டீ விளம்பரத்திற்கு பாராட்டுகள்.

வெள்ளி, 27 மார்ச், 2026

துறப்போம்! எதை வேண்டுமானாலும்

"மக்களே!
நாடு
மோசமான
கால கட்டத்தில்
உள்ளது

தியாகம் 
செய்யத்
தயராக இருங்கள்".

இது
தலைவர்

உடனே
கூட்டத்திலிருந்து
ஒரு குரல்
"இந்த 
ஒருமுறை மட்டும் 
நீங்கள் 
உங்கள் பதவிகளை 
தியாகம் செய்யுங்கள்.

அதுவும்
எங்களுக்காகவே.

நாங்கள் தானே
உங்கள்
உயிர்".

எனக் கேட்க
இருண்டது
தலைவரின் முகம்.

ஒரே… ஆனால் சமம் இல்லை

ஒரே நாடு 
ஒரே மொழி 
ஒரே தெய்வம்
ஒரே தேர்தல் 
ஒரே தலைவன்
எனக் கோஷமிடுவோர்களிடம்

மக்கள் எல்லாம்
ஒரே நிரை
என்று மட்டும்
ஏற்றுக்கொள்ள 
மறுப்பது ஏன்?

என்று நான் கேட்க

எங்கள்
வேதம்
சொல்கிறது ...

பிறப்பால்
நாங்கள்
உயர்ந்தவர்கள் !

முற்பிறவி
கர்மாவால்
நீங்கள்
எங்களுக்கு
ஈடாக மாட்டீர்கள்!

என 
மாற்றிப் பேசும்
சந்தர்ப்பவாதிகள்!

இவர்கள்
சமத்துவம் -

தெரிவு செய்த 
இடங்களில் மட்டுமே!

ஒலிபெருக்கியே பக்தி

நம் ஊரில்
பல்வேறு
தெய்வங்கள்

பல்வேறு
தெய்வங்களுக்கும் 

பற்பல 
கோயில்கள்

பற்பல
வழிப்பாட்டு
முறைகள்

பக்தர்கள்
எனப் பெயர் கொண்டு

பக்தி என்ற
குறிக்கொள் மறந்து

நானே
பெரியவன்

என் பெயரை
நிலைநாட்டுவேன்
என

ஊர் அதிர
ஒலிபெருக்கி அமைத்து

அத் தெய்வ
வழிப்பாட்டு முறை 
விட்டு விலகி

ஏதேதோ
தெய்வகளின் பாடல் -

வரிசை கூட தெரியாமல்

சத்தம்
ஒன்றே குறிக்கொளாய்

பூடம் தெரியாமல்
சாமியாடும் 
ஒலிபெருக்கி
பக்த'சாமிகள்'.

சொர்க்கம் தேடி நரகம்

சொர்க்கம்
செல்ல வேண்டி

உழைந்த காசையும்
நேரத்தையும்
வீணாக்கி

தெரியாத 
சொர்க்க
ஆசையில்

வாழும்
வாழ்க்கையை
நரகமாக்கும்
மாக்கள்.

பெரியார்

"மூட நம்பிக்கை
கொள்ளாதே"
யார் சொன்னார்கள்?

"சாமி
சொல்லிச்சு"

"கடவுள்
இல்லவே 
இல்லையாம்"
யார் சொன்னார்கள்?

"சாமி
சொல்லிச்சு"

"எந்தச் 
சாமி"

நம்ம
ராம'சாமி' —

பெரியார் தான்.

பயத்தை விதைக்கும் மதங்கள்

காலில்
கைகளில்
பல நிறங்களில்
கயிறுகள் கட்டினால்

இல்லா
பேய்கள்
பிசாசுகள்
அண்டாது...

தூங்கும் 
நேரத்தில்
தூங்காது
விழித்தெழுந்து
விளக்கெற்றினால்
உழைக்காமலே
செல்வம் வந்து சேரும்...

இன்ன நாளில்
இன்ன நேரத்தில்
முன்னோரை வழிபட்டால்
 அவர்கள் 
சொர்கம் செல்வர்
என ஒவ்வொரு ஆண்டும்
வழிபடச் செய்வித்து ...

இன்ன பல
அறிவுக்குப் புறம்பான
'நம்பிக்கை'களை
இட்டுக் கட்டி

அறிவை அல்ல -

மூட நம்பிக்கைகளையே
வளர்க்கும்
மதங்கள்.

நவீன தீண்டாமை

மக்கள்
வாழும்
ஒரு ஊர்

ஊரின் உள்
சாலையை பிரிக்க
ஒரு 
நீண்ட சுவர்

மக்கள் -

வலப்பக்கமிருந்து
இடப்பக்கமாய்

இடப்பக்கமிருந்து
வலப்பக்கமாய்

செல்வது
போவது
தடுத்து
 
ஒரு
நூறு மீட்டர் நடக்க
பல கிலோ மீட்டர்
சுற்ற வைக்கும்

நவீன
தீண்டாமைச் சுவர்

அரசே 
கட்டுகிறது.

'அறி'வாளிகள்

தண்ணீர்
வண்டிக்காரா...!

நீ
தண்ணீர் ஊற்றும் 
வீட்டுக்கார்களை
அழைக்க

தெருவே அதிரும்படி
காது கிழிக்கும் ஹார்ன் 
அடித்து அழைப்பது

சிறு குழந்தைகள்
பல வீடுகளின்
அழைப்பு மணியை 
அடித்து விளையாடுவது போல 

அவர்களோ...
குழந்தைகள்
விளையாடுகிறார்கள்

விட்டு விடலாம்

ஆனால் உங்களுக்கு!
வயது வளர்ந்தது
அறிவு மட்டும்...?
வளராமலே.

சாலை ராஜாக்கள்

ஹெல்மெட்
இரு சக்கர ஓட்டுநரின் 
உயிர் காக்கும்.

விபத்து நடந்தால்...

சீட்பெல்ட்
கார் ஓட்டுநரின் 
உயிர்
காக்கும்.

விபத்து நடந்தால்...

இவர்களின்
விதி மீறல்கள்
தண்டனையாகிறது
எப்போதும்.

என் வழி தனி வழி என
ஒரு வழிப் பாதையில்
எதிர் வழி வருவது

நேரம் ரொம்ப முக்கியம் என
செல்போன் பேசிக்கொண்டே
வண்டி ஓட்டுவது

ஜெட் என வேகமாக
வண்டி ஓட்டுவது

காது கிழிக்கும் ஹார்ன் 
அடித்துப் பயப்படவைப்பது

போன்ற சட்ட மீறல்கள்...

அக்கால ராஜா போல் -

சட்டம்
எங்கள் கையில் என...

உயிர்
மற்றவர்களது

மனிதனை அழிக்கும் மதங்கள்

மதம்
பிடிக்க வைக்கும்
மதங்கள்

ஆக்கிரமிப்பைப்
போதிக்கும்
மதங்கள்

தான் செய்வதை
நியாயப்படுத்தும்
மதங்கள்

சட்டங்களை மீறுவதற்கு 
எடுத்துக்காட்டாய்
மதங்கள்

கேள்வி கேட்காதே 
எனச் சொல்லும்
மதங்கள்

போதனைக்கும் நடப்பவைக்கும் 
எதிராய் இருக்கும்
மதங்கள்

மதங்கள்

மனிதனை
மனிதனாக மட்டும்
இருக்க விடாமல்...

புகாரின் மரணம்

புகார் செய்தால்
புகார் செய்தவர்களையே
விசாரிக்கும்
அதிகாரவர்க்கம்

புகார்
வருவததைத் தடுத்து
ஆவணங்களை
அழகுபடுத்தும்
அதிகாரவர்க்கம்

புகார் தடுத்து
புகாரே  இல்லாமல்
மாற்றும் தந்தரம்
'படித்த'
அதிகாரவர்க்கம்

புகாரே
பதிவிடாவண்ணம்
மறையும்
புகார்கள்

அடிமைத்தனம் 2.0

ஒரு
மனிதன்
தன் 
கால் மேல் கால்
போட்டு
உட்கார்வதைத்

தங்கள்
அதிகார இழப்பாய்

தங்கள்
மரியாதை இழப்பாய்

பார்க்கும்

'சட்டம்'
'காவல்'
'அரசு'

சிந்திக்கிறேன்...

ஏகாபத்திய அடிமையாய்
இருந்த
காலத்திற்கும்
இக்காலத்திற்கும்

வித்தியாசம்... 

அடிமைத்தனம்
தன் பெயரை
மட்டுமே மாற்றியது.

மக்கள் ஆட்சி!!!?

சட்டம்
மனிதனை
மிரட்டுகிறது

அதிகாரம்
மனிதனை
மிரட்டுகிறது

அரசு
மனிதனை
மிரட்டுகிறது

நடப்பது
'மக்கள் ஆட்சி'

மக்களுக்கு
இல்லாத

கரும் புள்ளிகள்

கடலில்
உப்பு கலந்தால்
கறைந்து விடும்

நாம் 
உணர்வதில்லை

காவல் துறையின்
விதிமீறல்கள்

வெள்ளைத் தாளில்
சில 
கரும் புள்ளிகள்

தெளிவாய்த்
தெரியும்
அத்துமீறல்கள்

பற்பல 
நல்லவைகளைக்
தாண்டி

கரும் புள்ளிகளைக்
களைய
மனமில்லாமல்

வெள்ளையையே
கறை படுத்தும்
அமைப்பின் இயந்திரம்

புத்தகச் சட்டம்

ஒரு வழிப் பாதையில்
எதிர் வரும்
வாகன ஓட்டிகள் -

ரோடு 
தங்களுக்கே
என ஆக்கிரமிக்கும்
'இனியவர்கள்

சாதி
மதம்
வக்கீல்
ஸ்டிக்கர்கள்
ஒட்டி மிரட்டும்
'நண்பர்கள்'

சட்டமோ
விதிமுறையோ
நல்லெண்ணமோ
மற்றவர்கள் மதிப்போ
இல்லாத
'மனிதர்கள்'

அதிலும்
செல்போனுடன்
'நேரத்தை வீணாக்காதவர்கள்'

சிந்தித்தேன் -

இவர்கள்...

ரோட்டின்
'வீர தீர புலிகள்'

சட்டம்...

புத்தகத்தில்
மட்டுமே இருக்கும்.

செவ்வாய், 24 மார்ச், 2026

கடவுள் இருக்கிறார்

யாரோ சிலரை எழுப்ப
ஊரையே எழுப்பும்
பள்ளிவாசல்கள்.

கடவுளை எழுப்புவதாகச் சொல்லி
மக்களின் தூக்கத்தை கலைக்கும்
சுப்ரபாதங்கள்.

காலையைக் கொண்டு வருவதாக
மணியோசையில்
அமைதியை உடைக்கும்
சர்ச்சுகள்.

காக்கும் பெயரில்
கவசங்கள் பாடி
காதுகளை கிழிக்கும்
கோயில்கள்.

போதனை என்ற போர்வையில்
உருக்கே உபதேசம் சிந்தும்
பள்ளிவாசல்கள்.

ஏன் அடிக்கிறோம் என்று தெரியாமல்
மணியைத் துரத்திக் கொண்டே இருக்கும்
கோயில்கள்.

பொது இடம் என்பதைக்
தனதாக்கிக் கொள்ளும்
வழித்தட பிள்ளையார்கள்.

விதிமீறல்களே 
எங்கள் வழக்கம் என
ஒலியும் ஒளியும் கூட்டி
மக்களின் நிம்மதியை
நெருக்கும்
வழிபாட்டு தலங்கள்.

அப்படியானால்...

ஆம்!

நான் வாழ்வது
நரகத்தில்தான்.

நரகம் இருக்கிறது.

அதனால் -

இருக்கிறார்
கடவுள்.

திங்கள், 23 மார்ச், 2026

செயலே பெயர்

நான்
எழுதிய
கவிதை நூலுக்கு
உன் பெயர்
சூட்ட விரும்பினேன்.

சூட்டினேன்...

நீ
செய்த
செயலையே!

காதல் வகுப்பு

நீ
ஏதோ ஏதோ
சொல்லிக்
கொடுக்கிறாய்
எனக்கு.

சிறப்பாகவே
கற்றுக் கொள்கிறேன்
உன்னிடம்.

ஆனால் -

நீ
எடுக்கும்
வகுப்புகளுக்கு
நான்
வைத்த பெயர்...

காதல்.

சிறந்த சிந்தனை

சிறப்பான 
சிந்தனைகளையே
கொள்ள வேண்டும்
என்கிறார்கள்
பெரியோர்கள்.

அதனால் -

நான்
சிந்திக்கிறேன்...

உன்னை
மட்டும்.

கனவல்ல…

என்னைப்
பார்த்து
கை அசைத்தாய்!

என்
அருகே
வந்தாய்!

என்
கையோடு கை
கோர்த்தாய்!

என்னை
கட்டிப்
பிடித்தாய்!

எனக்கு
முத்தம்
தந்தாய்!

என் 
கனவில்
என்றேன் 
அவளிடம்

சிறு புன்னகையோடு
சொன்னாள்

அது
கனவல்ல...

ராணி

நீயே
ராணி

எங்கள்
ராணி

நாங்கள்
உன் 
குடிமக்கள்

எங்கள்
தேவையறிந்து
தீர்த்து வைப்பது
உன் கடமை

அதனால் -

நீயே
எங்கள்
ராணி

மூதுரை பொய்யாக்கினாள்

காண மயிலாட,
கண்டிருந்த வான்கோழி —

மூதுரை சொல்லை
பொய்யாக்கியவள்
நீ.

நீ செய்யும்
செயலைக் கண்டு,

செயலில் இறங்கி
மேம்பட்டோம்.

உன்னைக் கண்டு
அறிவடைந்து —

வெற்றியானோம்
நாங்கள்.

வியாழன், 19 மார்ச், 2026

மெளனமாகிய சட்டம்

"தூங்கி
பல ஆண்டுகள்
ஆகி விட்டன"
நான்.

"ஏன்?"
அவள் பதற்றத்துடன்.

"வழிபாட்டுத் தலங்களில்
கட்டுக்கடங்காத ஒலி"
நான்.

"நம்
அரசியலமைப்புச் சட்டம்
தூங்குவதற்கான உரிமையைத்
தருகிறது.
புகார் செய்ய
வேண்டியதுதானே"
அவள்.

"சட்டம்
அவர்களிடம்
செல்லாது"
நான்.

சட்டம்
மெளனமானது.

அவள்
மூர்ச்சையானாள் -

சட்டம் 
செத்துவிட்டதோ 
என்று.

என்னை அறிந்தேன்

நான் -

பறக்கக் தெரியாத
பறவையாய்

நீந்தத் தெரியாத
மீனாய்

பாயத் தெரியாத 
புலியாய்

பாடத் தெரியாத 
குயிலாய்

இருந்தேன்
உன்னைக் 
காணும் வரை

உன்னைக் 
கண்டேன் 

என்னை 
அறிந்தேன்

உன்னுள் 
தொலைந்தேன்.

ஒன்று

வானில்
நட்சத்திரங்களை
ஒன்று
இரண்டு
மூன்று
...
...
...
...
ஆயிரத்தி பத்து
அவள்
வந்தாள்
ஒன்று
என 
எண்ணி முடித்தேன்.

பார்வை ≠ உண்மை

"நீ
மிகப் மிகப்
பெரியவள்".

"சரி"
அவள்.

"தலைக்கனம்?"

"இதில் என்ன
தலைக்கனம்?"
அவள்.

"நீ
மிகப் மிகப்
பெரியவள் என்று 
நம்புகிறாய் அல்லவா!"
நான்.

"நீ
மிகப் மிகப்
பெரியவள் 
என்னைப் பற்றி
உன் கருத்து.

நீ
கருத்து சொன்னாய்
அந்தக்
கருத்தைக் கேட்டுக் கொண்டேன்
அவ்வளவே"
அவள்

"புரியவில்லை"
நான்.

"யார் என்றாலும்
யார் பற்றியும்
கருத்து கூறலாம்

அது
உண்மையா?
பொய்யா?
என ஏன்
ஆராய வேண்டும்"
அவள்.

திகைப்பில்
வியப்பில்
நான்.

எல்லையற்றவன்

"உன்னை
வரையப் போகிறேன்"
அவள்.

ஆசையாய்
தலையாட்டினேன்.

என்னை -

நிற்க வைத்தாள்.

ஓவியப் பலகையில்
வரைய ஆரம்பித்தாள்...

"முடிந்தது
பார்க்க வா!"
அவள்.

சென்றேன்.

பார்த்தால்
வெறும்
வெள்ளை தாள் ...
ஓவியம்
ஏதுமின்றி.

என்ன இது?
என்ற
முக அசைப்பில்
அவளைப் பார்த்தேன்.

அவள்
சலனமின்றி -

"நீ
எல்லையற்றவன்
தாளுக்குள் 
அடங்கவில்லை

நீ
வெள்ளை மனம் 
படைத்தவன்
வண்ணங்கள்
ஏதுமில்லை"

என்று சொல்லி
கலகலவென
பலமாகச்
சிரிந்தாள்.

அந்தச்
சிரிப்பில்
நான்
...

சொற்கள் நீ

"கவிஞனா?"
அவள்.

"இல்லை"
நான்.

"கவிதைகள் எழுதுகிறாயே"
அவள்.

"கவிதை
எழுதுபவர்கள் 
எல்லாம் கவிஞர்களா?"
நான்.

"இருக்கட்டும்...

என்னைப்
பற்றி கவிதை
எழுது."
அவள்.

"முடியாது"
நான்.

"ஏன்?"
அவள்.

"என்
சொற்கள்
எல்லாம்
நீயாகி விட்டன."
நான்.

அவள்
செல்லமாய்
என் கண்ணத்தில்
முத்தமிட்டுச்
சென்றாள்.

உவமைக்கு அப்பால்

உவமையோ
உருவகமோ
இல்லாமல்
என்னைப் புகழ்
என
அவள்
கேட்டாள்.

நீ!
என்றேன்.

செவ்வாய், 17 மார்ச், 2026

விதிகளை மீறும் அவள்

என்னை
தன்னிடம்
ஈர்த்து
புவியிர்ப்பு விசையை
பொய்யாக்கியவள்.

அவளாகி
நிற்கும்
என்னை
காந்தம் கவர் விசையை
காணாமலாக்கியவள்.

காதலை
என்னிடம்
பொழிந்து
நீயூட்டனின் மூன்றாம் விதியை
இல்லாமலாக்கியவள்..

உண்மையை
பொய்யாக்குபவள்

பொய்யை
உண்மையாக்குபவள்

என் அவள்.

காற்றாய் அவள்

காற்று
அலைகளைத்
தள்ளுவது போல

காற்று
மேகங்களை
நகர்த்துவது போல

காற்று
கிளைகளைத்
அசைப்பது போல

காற்று
தூசுகளை
பறக்கவைப்பது போல

நான் -

போகும் வழி 
தொலைந்து

செய்வது 
அறியாது

தவிக்கையில்

என்னைத்
தள்ளுபவள் 
அவளே!

உனக்காக எல்லாம்

கடற்கரை மணல் கூட 
உன் கால்தடம் 
பதியாதவாறு 
உன் மெல்லிய பாதத்தைப்
தாங்கிக் கொள்கிறது.

காற்று கூட 
நீ மூச்சு விட 
சிரமப்படாவண்ணம்
அதுவே உள் சென்று 
மென்மையாய் வெளியேறுகிறது.

இந்த பூமி 
நீ நடந்து 
உன் கால்கள் வலிக்காதபடி  
தானே சுற்றி 
நீ செல்லும் இடத்தை
உன் காலடிக்கு
கொண்டு வருகிறது.

நீ போதுமே ...

உன் புன்னகை
ஒன்றே போதுமே
இன்றைய நாளை 
இனிமையாய் ஆக்கிட .

நீ 
என்னருகே இருப்பது 
மட்டும் போதுமே
நாளையை எதிர்கொள்ள.

நீ
நேற்றிருந்த 
உன் நினைவுகள்
மட்டும் போதுமே
மகிழ்ச்சியை
மீட்டெடுத்துக்கொள்ள.

நதியாகி நீ

அன்று 
ஒரு நாள் 
கனவில் 

நதியின் 
ஓரத்தில்
நின்று கொண்டிருக்கிறேன் 
நான்.

ஓடிக்கொண்டிருக்கும் நதி 
திடீரென 
நீயாய் 
மாறியது.

கரையின் ஓரத்தில் 
நான் 
மெல்லக் குனிந்து 
என் 
இரு கைகளாலும் 
உன்னை அள்ளுகிறேன்.

நீ 
என் கை 
இடுக்குகளின் வழியாக 
மீண்டும் நதிக்கே 
சென்று விடுகிறாய். 

மீண்டும் மீண்டும் 
அள்ளுகிறேன் 
உன்னை.

மீண்டும் மீண்டும் 
நீ 
நதிக்கே 
சென்று விடுகிறாய்.

என் கைகளை 
மெல்லப் பார்க்கிறேன்.

ஈரமாய் 
என் கைகள்.

கனவிலிருந்து
விழித்தேன்!

உன் கை விரல்களால்
என் கை விரல்களை 
பிணைத்து 
என் அருகில் நீ!

குலைப்பதும் அவள்! காப்பதும் அவள்!!

என் 
தூக்கத்தை 
கெடுக்கிறாள் 

என்னை 
தூங்க 
வைக்கிறாள் 

என் 
வேலையைச் செய்யவிடாமல்
தடுக்கிறாள் 

என்னை 
வேலை செய்ய 
வைக்கிறாள்

என் 
அமைதியை 
குலைக்கிறாள் 

என்னை 
அமைதியாய்
ஆக்கிறாள்

என் 
சிந்தனையை 
தடுக்கிறாள்

என்னைச்
சிந்திக்க 
வைக்கிறாள்

ஆம்! 
அவள் தான்!
அவளே தான்!!

அலைகளும் அவளும்

அன்றொரு நாள் 
இரவில் 
ஒரு கனவு 

ஆரவாரமான கடலில்
நாம் இருவரும் படகில் 

பலமான காற்று 
தத்தளிக்கிறது படகு 

துடுப்புகளையோ
காணவில்லை 

காற்று 
அடிக்கிறது 
படுவேகமாய்

படகு
தத்தளிக்கிறது
மேலும் கீழுமாய்

திடிக்கிட்டு
விழித்தேன்

என் 
கைதலையனை 
விடுத்து
தள்ளி
அவள்!

தூங்கும் எழில்

என் கையே 
உன்
தலையனையாய்

என் காலே
உன்
கால் மெத்தையாய்

நீ
தூங்கும் 
எழிலில்
உணர்வின்றி
போனேனே!

அவளே

காதலாய்
இருப்பது
எப்படி என்று

காற்றிடம்
கேட்டேன்

செடியிடம்
கேட்டேன்

பூவிடம்
கேட்டேன்

வண்டிடம்
கேட்டேன்

மரத்திடம்
கேட்டேன்

பறவைகளிடம்
கேட்டேன்

கிடைக்கவில்லை
விடை

அப்போது -

அவள்
வந்தாள்.

சட்டென 
கிடைத்தது
விடை

அவளே!

திங்கள், 16 மார்ச், 2026

இப்போது புரிகிறது

புரிகிறது ...
இப்போது
புரிகிறது.

உன்னை 
ஏன் யாரும்
மறுக்க முடியவில்லை 
என்று?

புரிகிறது ...
இப்போது
புரிகிறது.

அழகான 
பொருள் பதிந்த
நேர்மையான
உறுதியான
சொற்கள்
நீ
ஏன் பேசுகிறாய்
என்று.

நீ
பேசும்
சொற்களையே
மற்றவர்கள்
பிரதிபலிப்பதால்!

கண்டதை
பயன்படுத்தினேன்
உன்னிடம்

உன்னிடம்
காதலாகி
காதலாய்
பேசினேன்!

கிடைத்தது
அதே
பிரதிபலிப்பு

எங்கள் தலைவி

குறிப்புகள்
எழுதுகிறாய்

குறிப்பிலிருந்து
வரைபடம்
வரைகிறாய்

வரைபடத்திலிருந்து
குறிக்கொள்
கொள்கிறாய்

மற்றவர்களையும்
செய்ய 
வைக்கிறாய்

என்னையையும்
அழைத்துக்
கொள்கிறாய்

வெற்றி
பெறுகிறாய்

மற்றவர்களையும்
வெற்ற பெற
வைக்கிறாய்

நீயே
எங்கள் தலைவி
எனப் போற்றினால்

புண்ணகையுடன்
மறுதலிக்கிறாய்

உன்
அறிவைப் பார்த்து
வியந்து

உன்
ஆற்றலைப் பார்த்து
வியந்து

அனைவரும் சமம் 
என்ற உன் 
கொள்கையைப் பார்த்து
வியந்து

காதலை மறந்தேன்
நான்

உன்னைப் பார்த்து

உன் கண்ணிமைகள்
முடித்திறப்பதைப் பார்த்து
மின்னும் நட்சத்திரங்கள்

உன் பேச்சுக்களைக்
கேட்டுப் பாட
எத்தனிக்கும் குயில்கள்

உன் மூச்சுக்காற்றை
உணர்ந்து தென்றலாய்
மாறும் காற்று

உன்னைப் பார்த்து
காதலன்
ஆன நான்!

மௌனத்தின் மொழி

பகலின் வெளிச்சத்தில்
மௌனத்தில் பழகலாம் 
வா!

இரவின் அமைதியில்
விடிய விடிய
மௌனத்தில் பேசலாம் 
வா!

காதலின் மொழி
என்றென்றும் 
மெளனமாய் நிலைத்திட
வா!

மௌனத்தைக் கலைப்பதும்
காதல் என்றாக்கிட
மெளனம் கலைப்போம் 
வா!

என்னுடன் மட்டும்

தாயாய்
விளங்குகிறாய் 
நீ!

தந்தையாய் 
இயங்குகிறாய் 
நீ!

சகோதரியாய்
கருணையாய்
நீ!

சகோதரனாய்
பாதுகாப்பாய்
நீ!

குழந்தையாய்
விளையாடுகிறாய் 
நீ!

ஒவ்வொருடனும்
ஒரு விதமாய் 
நீ!

ஆனால் -

என்னுடன் மட்டும்

எப்போதும்
காதலியாய்
நீ! 

நதியாய் மாறினேன்

கேள்வி
கேட்பவள்
நீ!

கேள்வி
கேட்க விடுபவள்
நீ!

சட்டங்களை
உருவாக்குபவள்
நீ!

சட்டங்களை
அழிப்பவள்
நீ!

கேள்வியாய்
கேட்டேன்
நான்

ஏன் என்று ?

பழையன
கழிதலும்
புதுயன
புகுதலும்
என்றாள்
அவள்

பழையன
நம் முன்னோர்
அறிவு என்றன்
நான்

குட்டையில் தேங்கிய
நீராய்
கெட்டுப் போய்
விடாதே!
என்றாள்
அவள்

நதியாய்
மாறிவிட்டேன்
நான்

ஞாயிறு, 15 மார்ச், 2026

உயிர்மெய்

உயிரால்
உன்னை உருவகித்தேன்

மெய்யால்
உன்னை உருவகிக்கவி்ல்லை

ஏனெனில்
நீ
இல்லாமல் நான் இல்லை

உயிரோடு‍ மெய் கலந்து‍
உயிர்மெய்யாய் உருவகத்தேன்
என் உயிரே.

உன்னை உருவகிக்க
உயிரும்,
உயிர் மெய்யாய் ஆன
உன்றன் பெயர் மட்டும் போதுமே.

அனைத்து‍
உருவகங்களுக்கும்
உன் பெயரே
உணர்‌திடுமே!

மெய் உயிரோடு‍ சேர்ந்தால்தான்
மெய் அழகுரும்‍
உயிருடன்.

மெய் துடிக்கிறது‍
உயிருக்காக

மெய்யை மெய் ஆக்க
வருவாய்
என்ற நம்பிக்கையில் ...

இப்படிக்கு‍
காதலாய்
உன்றன் மெய்

நான் அவள் ஆனேன்

தூங்கிய தூக்கத்தில்
கனவில்
அவள் வந்தாள்.

என்னை
அழைத்தாள்.

விழித்தேன்.

நான்
அவள் ஆனேன்.

உன்னின் வடிவம் காதல்

எழுத்தின்
வடிவம்
உருவம்.

உன்னின்
வடிவம்
காதல்.

எல்லாம் நீ

உயிர் 
நீ!

மெய் 
நீ!

உயிர்மெய்
நீ!

ஆய்தம்
நீ!

எண்ணும்
நீ!

எழுத்தும்
நீ!

எழுத்தின் சொல்லும்
நீ!

சொல்லின் பொருள்
நீ!

மண்ணும்
நீ!

வானும்
நீ!

பண்பும்
நீ!

மாண்பும்
நீ!

எத்துனையிலும் அடங்காதவள்
நீ!

நீ
நீ மட்டுமே!

மாயக் கண்ணம்மா

எவ்விடத்திலும் 
தன்புகழைப் பாடாமல்
புகழோடு தோன்றும்
மாயவள் நீ!

வாழும் இலக்கணத்திற்கே 
வாழும் இலக்கணமாய் 
வாழ்பவள் நீ!

சூரியனுக்கே சுட்டெரிப்பதற்கு
வகுப்பு எடுத்த
சுடரொளி நீ!

நிலவுக்கே குளுமை 
பண்பினை உருவாக்கிய
குளிர்ச்சியானவள் நீ!

எப்புகழ் கேட்டாலும்
அப்புகழுக்கு ஏற்ற
எடுத்துக்காட்டு நீ!

நடமாடும் பல்கலைக்கழகம்

சொல் 
சிக்கனம் உடையவள் 
நீ!

புரியும்படி 
தெளிவாக சொல்பவள் 
நீ!

பேச்சு 
இனிமை கொண்டவள்
நீ!

நல்ல 
சொற்களையே பயன்படுத்துபவள் 
நீ!

இசைப்படக் 
சொற்களை வழங்குபவள்
நீ!

ஆழ்ந்து 
கருத்தை அளிப்பவள் 
நீ!

வரிசையை 
மாற்றாமல் தருபவள் 
நீ!

உள்ளதை 
உள்ளபடி பேசுபவள் 
நீ!

சிறந்ததை 
சிறப்பாக கொடுப்பவள் 
நீ!

புரியும் 
எடுத்துக்காட்டாய் நிற்பவள் 
நீ!

சிறந்த புத்தகத்திற்கு
நன்னூல் கூறும்
பத்து அழகை
உன்னிடத்தே கொண்டவள்
நீ!

அதனால்
நீ
நடமாடும் பல்கலைக்கழகம்

கடவுளுக்கு ஒப்பானவள்?

நீ 
கடவுளுக்கு ஒப்பானவள் 
என்றேன் நான்

நீ 
அதிசிறந்த கற்பனாவாதி 
என்றாள் அவள்

ஏன்? 
என்றேன் நான்

என்னவென்றே தெரியாத 
ஒன்றுடன் 
கண்ணுக்குத் தெரியும் 
என்னுடன் ஒப்பிடுகிறாய்!

அதனால் 
என்றாள் அவள்

இல்லை என்கிறாயா?   
கேட்டேன் நான்

இருப்பதினால் என்ன பயன் 
என்றாள் அவள் 

என்னிடம் 
பதில் இல்லை 

உங்களிடம் ...?

சனி, 14 மார்ச், 2026

மாறாத நீ

மாற்றம் 
ஒன்றே மாறாது

அதற்கு 
நீயும் 
விதிவிலக்கல்ல

நானும் 
விதிவிலக்கல்ல

யாரும் 
விதிவிலக்கல்ல

ஆனால் -

நீ 
மாறாமலே 
இருக்கிறாய்!

வியந்தேன்! 
கண்டு கொண்டேன்!!

ஆம்!
உன்னுடைய மாற்றம் 
வளர்ச்சியாக மட்டுமே!

அவளிடம் கண்ணீரா?

உன்
கண்ணில்
கண்ணீரா?

நீ
அழுகிறாயா?

ஒரு போதும்
இருக்காது

என்
கண்ணிலும்
நீர்!

ஓ!
சுற்றிலும்
புகை
மூட்டம்!

அருகிலிருக்கும் உயரம்

மற்றவர்கள் 
உன்னை 
உயரத்தில் தான்
வைத்து பார்க்கிறார்கள்

நானும் 
அவ்வாறே 

நீயும் 
உயரத்தில் 
தான் இருக்கிறாய் 

நான் 
இருக்கும் இடத்திலிருந்து 
நீ 
வெகு  உயரத்தில் 

ஆனால் 
நீ 
என்னருகே 
தான் எப்போதும்
எப்படி?

நம்ப முடியவில்லை

நீ
குழந்தையாய்
இருந்த போது ...

மனம் 
நம்ப மறுக்கிறது

நீ
குழந்தையாய்
இருந்திருப்பாய் என்று

நீ வந்திராவிட்டால்...

நீ
வந்த பின் தான்
காண்கிறேன்
சுற்றுச்சூழல்.

நீ
வந்த பின் தான்
உணர்கிறேன்
தன்உணர்வு.

நீ
வந்த பின் தான்
கேட்கிறது
சுற்றுப்புற ஒலி.

நீ
வந்த பின் தான்
அறிந்தேன்
சுவை.

நீ
வந்த பின் தான்
தெரிகிறது வீசும்
நறுமணம்.

புதன், 11 மார்ச், 2026

ஆக்கிரமக்காரி

நீ
மெல்ல மெல்ல
என்னை
ஆக்கிரமித்தாய்!

நீ
ஆக்கிரமக்காரி!
என்றேன்
செல்லக் கோபத்துடன்.

அவள்
முறுவலித்தாள் -
பதில் தந்தாள்!

காதலுக்கு
தெரியாது
ஆக்கிரமிப்பு!

நான்
என் மனதில் 
நீ
நுழைய
அனுமதித்தேன்!

நீ
உன் மனதில் 
நான்
நுழைய
அனுமதித்தாய்!

அழகைக் கற்ற காதல்

உன்னைக் காதலிக்கும்
முன்

நீ மட்டும் தான்
அழகு
என்று இருந்தேன்

உன்னைக் காதலித்த
பின்
தெரிந்து கொண்டேன்

உலகத்தில் 
உள்ள 
எல்லாம்

அழகு
என்று!

செவ்வாய், 10 மார்ச், 2026

நாம்

நான் -

நான்
சொல் என்றால்
நீ
எழுத்து.

நான்
கவிதை என்றால்
நீ
பொருள்.

நான்
மெய் என்றால்
நீ
உயிர்.

நான்  
நான் என்றால்
நீ.

நான்
நீ என்றால்
நான்.

அவள்  
முறுவலித்தாள்
திருத்தினாள் -

நான் என்றால்
நாம்.

நீ என்றால்
நாம்.

அவளுடைய நான்

அவளின்
காதலன் நான்
சொர்க்கம்!

அவளுடன்
நான்
சொர்க்கத்தில் சொர்க்கம்!

புன்னகையில் தோற்றேன்

கடற்கரையில்
நானும் அவளும்

அவள் -

நண்டு நடப்பதை
ரசிக்கிறாள்!

கறையோர சிப்பிகளை
ரசிக்கிறாள்!

மிதக்கும் படகுகளை
ரசிக்கிறாள்!

அடிக்கும் அலைகளை
ரசிக்கிறாள்!

கால் தடங்களை
ரசிக்கிறாள்!

நான் சொன்னேன்
காட்சி ஒவ்வொன்றையும்
ரசிக்கும்
உன்னையே
ரசிக்கும்
நானே
மாபெரும் ரசிகன்
என்று

மெல்லப் புண்ணகை
பூத்தாள்
நான் தோற்றே
போனேன்!

திங்கள், 9 மார்ச், 2026

என்னை என்னையாகப் பார்

அவளிடம்
நீ பேசுவதே
குயில் பாடுவது
போல்
இனிமையாய் உள்ளது
என்றேன்.

அவள்
எள்ளலாய் 
சிரித்துக் கொண்டே

குயிலை 
குயிலாய் 
ரசி!

என்னை
என்னையாக 
பார்!
என்று.

ஞாயிறு, 8 மார்ச், 2026

உள்ளத்தில் அவள்

நாளை
உன்னைக் காண
வரமாட்டேன் என்றாய்!

நீ
வரும் வரை
நான்
என் கண் இமைகளை
திறக்கமாட்டேன்
என்றேன்

ஏன்?
என்றாய்

உன்
பிம்பத்தை
வைத்துக் கொள்ள
என்றேன்

புண்னகைத்தே
நீ
சொன்னாய்
உன்
மனதைப் பார் 

பெண்

நெற்றிப் பொட்டு 
விலக்கினாய்!

கை வளையல் 
கலைந்தாய்!

நீண்ட சடை 
நீக்கினாய்!

சின்னங்கள் வழி
அடிமை நீக்க

முன்மாதிரியாய்
திகழ்கிறாய்!

உயிர்மெய்

உன் மெய்
காண
என் உயிர்
மறந்தேன்!

உன் உயிர்
பற்றி
என் மெய்
உணர்ந்தேன்!

சனி, 7 மார்ச், 2026

உன் உள் தேடு

ஏழு கடலிலும்
அவளைத்
தேடினேன்!

ஏழு மலையிலும்
அவளைத்
தேடினேன்!

தேடினேன்!
இடம் பல என்று

எங்கும் 
காணவில்லை
அவள்

சோர்ந்தேன்

என் நிலை
கண்டு சொன்னாள்
உன் உள் தேடு
என்றாள்!

தூக்கத்தை திருடியவள்

என்னைத் 
திருடிச் சென்றது 
மட்டும் இல்லாமல் 
என்
தூக்கத்தையும்
கவர்ந்து 
சென்றாள்!

வெள்ளி, 6 மார்ச், 2026

நீயே தமிழ்!

அறமாய் இருக்கிறாய்
அதனால் நீ 
வெண்பா!

தலைமையாய் இருக்கிறாய்
அதனால் நீ 
ஆசிரியப்பா!

உணர்வுடன் இருக்கிறாய்
அதனால் நீ 
கலிப்பா!

இனிமையாக பேசுகிறாய்
அதனால் நீ 
வஞ்சிப்பா!

பலவும் கலந்து இருக்கிறாய்
அதனால் நீ
மருட்பா!

மொத்தத்தில்
நீ
தமிழ்!

நீ = காதல்

வினையாலணையும் பெயர் 
ஒன்று சொல் என்றாய்
காதலி
என்றேன்..!

உருவகம்
எடுத்துக்காட்டு தா என்றாய்
காதல்
என்றேன்!

தொழில் பெயர்
கூறு என்றாய்
காதலித்தல்
என்றேன்!

வினை
விளக்கம் சொல் என்றால்
காதல் 
என்றேன்!

காதல்
எடுத்துக் காட்டு தா என்றாய்
அமைதியாய்
நீ
என்றேன்!

அடைமொழியே நீ!

சிறந்த செயல் 
என்கிறேன்
செயல் 
என்கிறாய்!

இனிமையான பாடல் 
என்கிறேன்
பாடல் 
என்கிறாய்!

அழகிய பெண் 
என்கிறேன்
பெண் 
என்கிறாய்!

கனிந்த பழம் 
என்கிறேன்
பழம் 
என்கிறாய்!

நீ
என்றேன்
சொல் இன்றி
நின்றுவிட்டாய்!

நீ
அடைமொழி இல்லா -

சிறப்பு 
நீ!

இனிமை 
நீ!

அழகு
நீ!

கனிவு 
நீ!

அது நானே அல்ல

அவளிடம் கேட்டேன் -

என் நினைவுகளை
நீ மறந்து விட்டால்
எப்படி இருப்பாய் என்று?

அவள் 
சட்டென்று  சொன்னாள் -

அது நானே 
அல்ல!

நிறை நீ

உன்னிடம்
இல்லாத ஒன்று

மற்றவர்களிடம்
இருப்பது -

மொழியில் கூட
வழு உண்டு

தங்கத்தில் கூட
குறை உண்டு

வைரத்தில் கூட
பழிப்பு உண்டு

மனிதர்களில் கூட
குற்றம் உண்டு

ஆனால்
உன்னிடத்தில்
குற்றமில்லை
குறையில்லை

நிறை மட்டும்
நீ!

வினை நீ!

வினை இல்லா
வினை செய்பவள்
நீ!

வினைத் தொகை 
கற்றேன்
உன்னாலே!

நேற்று
நீயாக
இருந்தாய்!

இன்று
நீயாக 
இருக்கிறாய்!

நாளையும்
நீயாகவே
இருப்பாய்!

வியாழன், 5 மார்ச், 2026

நீயே புதிர்! நீயே விடை!

உன்னை அறியாதவர்களுக்கு 
புதிர் 
நீ!

உன்னை அறிந்தவர்களுக்கு 
விளக்கம்
நீ!

உன்னை அறியாதவர்களுக்கு 
கேள்வி
நீ!

உன்னை அறிந்தவர்களுக்கு 
பதில்
நீ!

அறியாதவர்களையும்
அறிய வைப்பவள்
நீ!

பதில் இல்லா கேள்விக்கும்
விடை
நீ!

மொத்தத்தில் -

புதிராய் பார்பவர்களுக்குப்
புதிராய்

விடையாய் பார்பவர்களுக்குப்
விடையாய்

இருப்பவள்
நீ!


புதிர் அல்ல நீ!

உருகாத

குளுமை 
நீ

சுடாத
வெம்மை
நீ

வளையும்
கடினம்
நீ

செருக்கில்லா
உயரம்
நீ

நகலில்லா
உண்மை
நீ 

மெதுவாய் வென்றாய்

மெதுவாக
நடக்கிறாய்!

மெதுவாக
சாப்பிடுகிறாய்!

மெதுவாக
குடிக்கிறாய்!

மெதுவாக
பேசுகிறாய்!

மெதுவாக
இருக்கிறாய்!

ஆனால் -

உன் அழகால்
வேகமாய்
என்னை 
ஈர்த்தாய்!

உன் அறிவால்
வேகமாய்
என்னைக்
கவர்ந்தாய்!!

உன்னில் கண்டேன் உண்மையை

அகத்தின்
அழகு
முகத்தில் தெரியும்
என்பதை
உன்னிடம் தான் 
கண்டு உணர்ந்தேன்

கண்டேன் 
உன்றன் உள்ளத்தின் அழகை

கண்டேன் 
உன்றன் எழில் அழகை

திங்கள், 2 மார்ச், 2026

நான் அல்ல, நீயே

உன்னைத்
தாலாட்டு பாடி 
தூங்க வைக்க முயல்கிறேன்
ஆனால்
உன்
பேச்சைக் கேட்டு
நான்
தூங்கிப் போகிறேன்!

உன்னைக்
காலையில் துயில்
எழுப்ப நினைக்கிறேன்
ஆனால்
உன்
தூங்கும் எழிலைப் பார்த்து
நான்
தூங்கிப் போகிறேன்!

ஆனால்
நீயோ -

நீ 
நினைத்ததை 
நீயே
நிறைவேற்றிக் கொள்கிறாய்.

ஞாயிறு, 1 மார்ச், 2026

நீயே இலக்கணம்

வரையறைகள் இல்லா 
ஒழுங்கு
நீ
மற்றவர்களுக்கு 
இலக்கணமாய் இருக்கிறாய்

கரைகள் இல்லா 
நதி 
நீ
மற்றவர்களுக்கு
பாதுகாப்பாய் இருக்கிறாய்

வரலாறு காணாத 
வரலாறு
நீ
மற்றவர்களுக்கு
மாற்றங்களாய் இருக்கிறாய்

நனவுக்கான கனவு

கனவுகளை
நினைவாக்கிறாய்

நினைவாக்குவதற்காகவே

கனவுகள்
காண்கிறாய்

நீயே என் பாடம்

கதைகள்
சொல்கிறாய்

கவிதைகள்
எழுதுகிறாய்

மேடைகளில்
பேசுகிறாய்

அனைத்திலும் -

உன் கருத்துகளை
முன்வைக்கிறாய்

யாரையும் எதிர்க்காமல்.
யாரையும் புண்படுத்தாமல்.


நீயே 
என் பாடம்
நீயே 
என் படிப்பு

எதைக் கற்க?

அன்பாய்
பிறக்கும் போதே

பண்பாய்
பிறக்கும் போதே

அறிவாய்
பிறக்கும் போதே

நிறைவாய்
பிறக்கும் போதே

பின் -

எதைக் கற்க
பள்ளிக்கூடம் போனாய்!

வாழ்வே காதல்

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு மணிநேரமும்
ஒவ்வொரு நாளும்
நினைத்தலில் அல்ல
காதல்

ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு மணிநேரமும்
ஒவ்வொரு நாளும்
வாழ்வதலில் தான்
காதல்

என
வாழ வைத்தாய்

வாழ்வில் தான்
காதல்
என

காதலை
காதலிக்க வைத்தாய்

அகராதி நீ

அன்பு நீ
அறிவு நீ
இயல்பு நீ
ஈகை நீ
உயிர் நீ
ஊக்கம் நீ
என்றுமே நீ
ஏவுபவள் நீ
ஐயமில்லா நீ
ஒவ்வொன்றும் நீ
ஓவியம் நீ
ஒளவியம் நீ

வல்லினம் + ஃ = மெல்லினம்

வல்லினமாய்
நீ

ஆயுதமாய் 

ஃ 
இணைத்தாய்

மெல்லினமாய்
நீ!