சமீபத்தில் சக்ரா கோல்டு
டீ விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது. அழகான யதார்த்தமான விளம்பரம். ஒருவழிப் பாதையில்
'ராங் ரூட்டில்' (Wrong Side) திமிருடன் கார் ஓட்டி வரும் ஒரு நபர், சரியாக வரும் பெண்ணை
வழிவிடுமாறு மிரட்டுவார்.
ஆனால், அந்தப் பெண் பணியாமல் உறுதியாக நின்று, தவறு செய்தவரையே பின்னோக்கிச் செல்ல
வைப்பார்.
இந்தக் காட்சி வெறும்
விளம்பரமல்ல — நம் அன்றாடச் சாலைப் போரின் கசப்பான உண்மை. விளம்பரம் காட்டும் உண்மை;
விளம்பரம் சொல்லும் அவலம் நம் வாழ்க்கையில், இதுபோன்ற சூழல்களை நாம் நாள்தோறும் சந்திக்கிறோம்.
ஆனால், அங்கே நடப்பதோ தலைகீழ். தவறு செய்பவர்களே "உரிமையோடு" கோபப்படுகிறார்கள்;
சரியாகச் செல்வோர் சங்கடத்துடன் ஒதுங்கிச் செல்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்களோ,
"ஏதோ அட்ஜஸ்ட் செய்து போங்களேன்" என்று தர்ம உபதேசம் செய்கிறார்கள்.
இந்த 'அட்ஜஸ்ட்மென்ட்' கலாச்சாரம் தான், தவறு செய்பவர்களின் துணிச்சலைத் தூண்டுகிறது.
ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது என்பது வெறும் விதிமீறலா? இல்லை... குற்றவியல் நடவடிக்கை! ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது என்பது வெறும் 'போக்குவரத்து விதிமிறல்' அல்ல; அது சக மனிதனின் உயிருக்குக் குறிவைக்கும் ஒரு குற்றவியல் நடவடிக்கை.
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ், இத்தகைய செயல்கள் இப்போது கடுமையான பிரிவுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன: BNS பிரிவு 281 (முன்னைய IPC 279): பொதுப்பாதையில் அஜாக்கிரதையாக அல்லது அலட்சியமாக, மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. சட்ட நடவடிக்கைகள்: இப்போது இது வெறும் அபராதத்துடன் முடிந்துவிடுவதில்லை. காவல்துறை அவர்கள் மீது FIR பதிவு செய்யலாம். இது ‘அபாயகரமான ஓட்டுதல்’ (Rash Driving) எனக் கருதப்படும். தண்டனை விவரம்: இக்குற்றத்திற்காக 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அல்லது ₹1,000 முதல் ₹5,000 வரை அபராதம், அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
'பழக்கதோஷம்' எனும் உயிர்க்கொல்லி சட்டம் கடுமையாக இருந்தாலும், "கொஞ்சம் தூரம் தானே", "எப்போதும் இப்படித்தான் போவேன்" எனப் 'பழக்கதோஷம்' பேசும் கூட்டம் பெருகிவிட்டது. இவர்கள் சரியாகச் செல்வோரையே மிரட்டுவதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் ஒருவித 'சாலை ரவுடித்தனம்'. இத்தகையவர்கள் செய்யும் இந்தச் சிறிய 'ஷார்ட்கட்' ஆசை, ஒட்டுமொத்தப் போக்குவரத்து ஒழுங்கையும் சீர்குலைத்து, பலரின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது. இது மற்ற வாகன ஓட்டிகளுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தையும், எரிச்சலையும் தருகிறது.
மாற்றம் எங்கே தொடங்கும்? அந்த விளம்பரத்தில் அந்தப் பெண் காட்டிய துணிச்சல், நம்முடைய வாழ்க்கையிலும் நம் ஒவ்வொருவருக்கும் தேவை. மாற்றம் என்பது தனிமனித ஒழுக்கத்தில் தொடங்க வேண்டும்: சாலை விதிகளைப் பின்பற்றுவது ஒரு சட்டக் கடமை மட்டுமல்ல, அது ஒரு மனிதநேயப் பண்பு. அது ஒரு சமூகச் கடமை. தவறு செய்பவர்களுக்கு வழிவிடுவதைத் தவிர்த்து, அவர்களைச் சட்டத்திற்குப் பணிய வைக்கும் விழிப்புணர்வு பொதுமக்களிடம் வளர வேண்டும்.
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தால் விபத்து ஏற்படாது. ஆனால் பொதுப்பாதையில் அஜாக்கிரதையாக அல்லது அலட்சியமாக, மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது - ஒருவழிப் பாதையில் தவறான திசையில் வாகனம் ஓட்டுவது, செல் போன் பேசிக் கொண்ட வாகனம் ஓட்டுவது, அதி வேகமாக வாகனம் ஓட்டுவது, அதீத ஒலி ஏற்படுத்துவது போன்றவை விபத்து ஏற்பட வைக்கும்.
சாலை என்பது தனி மனிதனின் வசதிக்காக உருவாக்கப்பட்டதல்ல; அது அனைவரின் பயணத்திற்கானது. ஒருவழிப் பாதையில் தவறான திசையில் செல்லும் ஒவ்வொருவரும், ஒரு விதியை மட்டுமல்ல — மறற் உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்துகிறார்கள் என்பதை உணர வேண்டும்.
இனிமேல் சாலைகளில் “அட்ஜஸ்ட்” செய்ய வேண்டியது விதிமீறல்களுக்காக அல்ல விதியை மீறத் துடிக்கும் நம் மனநிலைக்காகத்தான்!
சக்ரா கோல்டு டீ விளம்பரத்திற்கு பாராட்டுகள்.
No comments:
Post a Comment